Sunday, January 25, 2004

 
அசரீரி

எனக்கொரு நண்பர் உண்டு. அவரைச் செல்லமாக அசரீரி என்று அழைப்பேன். அசரீரி என்பது புராணக் கதைகளில் அவ்வப்போது தோன்றிக் குரலை மட்டும் காண்பிக்கும். அசரீரிக்கு உருவம் கிடையாது. கதாப்பாத்திரங்கள் தங்களுக்குள் பேசிக்கொன்டிருக்கும்போது, திடீரென்று அசரீரியின் குரல் கேட்கும். அசரீரியிடம் நேரடியாக யாரும் பேசியிருக்க மாட்டார்கள். ஆனால் அது தானாகவே எல்லோருக்கும் கேட்கும் வகையில் பேசிவிடும்.

நமது நண்பரும் கிட்டத்தட்ட அப்படித்தான். யாராவது இருவர் உரையாடிக்கொன்டிருக்கும்போது, நண்பர் தனது மூக்கை நுழைத்துத் தனக்குத் தோன்றியக் கருத்தை பட்டென்று கூறி விடுவார். அப்போது உரையாடலில் இருக்கும் விஷயத்திற்கு சம்பந்தம் இருக்கிறதா இல்லையாவென்றெல்லாம் யோசிக்க மாட்டார்.

"உங்கள் வீட்டில் 'டிகாக்ஷன்' காபியா அல்லது 'இன்ஸ்டன்ட்' காபியா?" - முதலாமவர்.

"டிகாக்ஷனுக்கெலாம் ஏது நேரம், இன்ஸ்டன்ட் தான்" - இரண்டாமவர்.

"காபி குடித்தால் இளம் வயதிலேயே மாரடைப்பு வந்து விடுமாமே" - அசரீரி நண்பர்.

கல்யாண வீட்டில் சாப்பிட்டுக் கையலம்பும் இடத்தில்,
"அடடா, உருளைக்கிழங்கு ரோஸ்ட் ப்ரமாதம்" - மு.

"ஆமாமாம், இந்த மாதிரி எங்கேயும் சாப்பிட்டதில்லை" - இ.

"வாழைக்காய் மூட்டுவலிக்கு ரொம்ப நல்லதாம்" - அ.ந.

கதையில் அப்போது வரும் ஒரு பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகவோ, பிற்காலத்தில் வரப்போகும் ஒரு பிரச்சினையை உணர்த்துவதாகவோ அசரீரியின் கருத்து அமையும். நமது நண்பரிடம் அதையெல்லாம் எதிர்ப்பார்க்க முடியாது. பிரச்சினையே நண்பர்தான். என்னதான் அசரீரி மாதிரி உருவம் இல்லாதது, இருப்பதை மறந்து விட்டுப் பேசலாமென்றாலும், அந்தக் குரலை வெகு நேரம் உதாசீனம் செய்ய முடியாது. பொறுமையிழந்து பதில் பேசி விடுவோம்.

"சே, சச்சின் எதிர்ப்பார்த்த அளவு ரன்னே அடிக்கலை" - நான்.

"டெஸ்ட் மேட்சில் அப்படித்தான் இருக்கும். ஒன் டேயில் பாருங்கள், நல்லா விளாசப்போறார்" - நண்பர் 1.

"என்னைக் கேட்டால் கிரிக்கெட் மேட்ச்சே ஒரு வேஸ்ட்னு சொல்லுவேன்" - அ.ந.

நான் கஷ்டப்பட்டுப் பொறுமையைக் கடைப்பிடித்து, "உங்களை நாங்க கேட்கவேயில்லயே" என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, மீண்டும் சம்பாஷணையை தொடருவேன்.

"பாகிஸ்தானிடம் அவருடைய பாச்சா பலிக்குமானு பாக்கணும்"

"சும்மா கதறக் கதற அடிக்கப் போறார் பாருங்களேன்"

"கிரிக்கெட் பந்து மேல பட்டா என்னமா வலிக்கிறதே. ஏன் ரப்பர் பந்தில் விளையாடினா என்ன கேடுனு கேக்கறேன்" - அ.ந.

"ஐயா சாமி, ஆளை விடுங்க. கிரிக்கெட் விளையாடறதே வேஸ்ட் தான். தாராளமா ரப்பர் பந்தில் விளையாடலாம். அது கூட சில சமயம் வலிக்கும். பேப்பர் பந்து தான் சரி. எதுக்கு வம்பு, பேசாமல் எல்லாரும் "புக் கிரிக்கெட்" ஆட ஆரம்பிக்கலாம். இப்போ திருப்தியா?" என்று பொறுமை இழந்து விடுவோம்.

"கோவிச்சிக்காதீங்க, ஏதோ என் மனசில் பட்டதைச் சொன்னேன். உங்க எல்லாம் அளவு எனக்கு உலக அனுபவம் அவ்வளவு கிடையாது. எனக்குத் தெரிந்த நாலு விஷயத்தைப் பத்தி பேசலாம்னு பேசிட்டேன். தப்பா இருந்தா மன்னிக்கணும்" என்று அசரீரி நண்பர் ஒரே சென்டிமென்டாக பதில் சொல்ல நமக்கு மனசு கேட்காது.

"ஹ.. அதனால் என்ன .. நீங்க சொன்னதும் ஒரு விதத்தில் நியாயந்தானே" என்று சொல்லிவிட்டு "என்ன, போட்டோ எடுக்கணுமா, இதோ வரேன்" என்று நமக்கு மட்டும் கேட்ட அசரீரியைக் காரணம் காண்பித்துவிட்டு மெதுவாக நழுவ வேண்டியிருக்கும்.

உங்களில் யாருக்காவது அசரீரி நண்பர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்று ஏதாவது புது ஐடியா இருந்தால் சொல்லுங்களேன், ப்ளீஸ்..

This page is powered by Blogger. Isn't yours?