Sunday, October 26, 2003

 
பிள்ளையார் சுழி
கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்பது என் நீண்ட நாள் அவா. பதினோரு வருடங்களுக்கு முன்னால் ஜார்ஜியா டெக் (Georgia Tech) கல்லூரியில் முதன்முதலில் ஒரு மேக்கின்டாஷ் (Macintosh) கணினியில் டாக்டர் கோவிந்தராஜ் அவர்களின் 'பல்லடம்' எழுத்துரு (Font) மூலமாக தமிழை எழுதி திரையில் பார்த்தபோது திறந்த வாய் இன்று யுனிகோடில் (Unicode) இணையப் பக்கத்தில் எழுதும்போதும் மூடவில்லை. அத்தகைய வியத்தகு முன்னேற்றம். அப்போதெல்லாம் திரையில் தமிழைப் பார்த்து, 'ப்ரிண்ட்' எடுத்து, ஊருக்கு கடிதம் அனுப்புவது ஒரு மிகப் பெரிய விஷயம். தமிழில் மின் அஞ்சல் (Email) அனுப்புவது என்பது நினைத்துப் பார்க்கவே முடியாது. அது இணைய தளங்கள் (web sites) இல்லாத இணையம் (Internet). இணையத்தில் அப்போது பயன்பட்டு வந்தது, மின் அஞ்சல் மற்றும் செய்திக்குழுக்கள் (Newsgroups) மட்டுமே. அவ்விடங்களில் தமிழை ஆங்கில எழுத்துக்கள் கொண்டு தான் எழுதுவார்கள் (Transliteration). 'soc.culture.tamil' என்கிற செய்திக்குழுவில் பல கவிதைகள், கட்டுரைகள், ஏன் நாவல்கள் கூட (ஒரு நண்பர் சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' நாவலின் சில பகுதிகளை எழுதியதாக ஞாபகம்) அந்த முறையில் வெளிவந்துள்ளன. அங்கே ஆரம்பித்தது, பல தொழில்நுட்ப இன்னல்களைக் கடந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறோம். யுனிகோட் (Unicode) உதவியால் இனி ஒரே முறையில் எல்லோராலும் கணினியில் தமிழ் எழுதப் படிக்க முடியும். அம்முறையில் மேன்மேலும் பல இணையத்தளங்கள் தோன்ற வேண்டும். தோற்றுவிப்போம்!!

This page is powered by Blogger. Isn't yours?